கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பாலமுனைக் கிரமத்தில், கடற்கரையை மிக அண்மித்த பகுதியில் ரம்மியமான சூழலிலே கமு/அக்/அல்-ஹிக்மா வித்தியாலயம் அமையப்பெற்றுள்ளது.
முற்றிலும் மீன்பிடித் தொழிலையே தமது சீவனோபாயமாக நம்பி, படிப்பறிவின்றியும் கல்வியின் தூர சிந்தனையின்றியும் வாழ்ந்த சின்னப்பாலமுனைக் கிராம மக்கள் இப்பாடசாலையின் முலம் கல்வியறிவைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. மர்ஹ_ம் அக்பர் மாஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற ஏ.ஏ. உதுமாலெவ்வை அவர்களின் அயராத முயற்சியினால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் உருவாக்கத்திற்குப் பிறகு இங்குள்ள மக்களின் கல்வி பற்றிய சிந்தனை கிளர்ந்தெழுந்தது. நாம்தான் கற்கவில்லை என்றாலும் தமது பிள்ளைகள் கற்க வேண்டுமென்ற கல்வித் தாகமும் அறிவைத் தேடும் முயற்சியும் உருவானது.
1959, மே மாதம் 13ம் திகதி 31 மாணவர்களுடன் 30’*16’ அளவுடைய கிடுகுக் கூரையுடைய தற்காலிக கட்டடத்தில் அக்பர் மாஸ்டரை அதிபராகக் கொண்டு இப்படசாலை ஆரம்பிக்கப்பட்டது முதல் மாணவர்கள் பெரும் ஊக்கத்துடன் பயின்று வந்தார்கள். இதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மாணவர் தொகை அதிகரித்ததுடன் ஒரு சில ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
பாடசாலையை அண்மித்திருந்த அரச காணியில் பாடசாலைக்காக 5 எக்கர் காணி ஊர்மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது. பிச்சைக்குட்டியார் எனும் சமூக நேசர் இதற்காக அர்ப்பணிப்போடு பணியாற்றினார். பின்னர் 1964ல் 100’*20’ அளவுடைய நிரந்தரக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டது. ஆரம்ப காலம் முதல் 5 ஆம் ஆண்டுவரை கல்வி கற்கக்கூடிய நிலைமையே இருந்து வந்தது. ஆனால் வறுமை காரணமாக மிகப் பின்தங்கிய நிலையில் இம்மக்கள் வாழ்ந்ததால் 5ஆம் ஆண்டோடு தமது படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டார்கள்.
மர்ஹ_ம் அக்பர் மாஸ்டர் அவர்கள் 1965.09.06 வரை கடமையாற்ற, தொடர்ந்து மர்ஹ_ம் வை. இஸ்மாலெவ்வை அவர்கள் 1965.09.06 முதல் 1980.06.14 வரையும், பின்னர் 1980.05.15 தொடக்கம் 1983.02.08 வரை மர்ஹ_ம் எம்.வை. உதுமான்சாஹிபு அவர்களும் தொடர்ந்து 1983.02.08 முதல் 1990.12.31 வரை நிந்தவூரைச் சேர்ந்த மர்ஹ_ம் எம்.எம். ஹனீபா அவர்களும் பல்வேறு அடிப்படைப்படைப் பிரச்சினைகள் இருக்கத்தக்க நிலையில் தம்மால் முடிந்தவரை சிறப்பாகக் கடமையாற்றினர்.
1991.01.01 முதல் பாலமுனையைச் சேர்ந்த எம்.எம். சுபையிர் அவர்கள் கடமையேற்றதன் பின்னர் இவ்வாறான நிலைமையில் மாற்றமேற்பட்டதுடன் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியும் கண்டது. இரவு பகலாக மாணவர்களது கல்வி முயற்சிக்கு உரமூட்டினார். பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று அழைத்து வந்து கற்கச் செய்வதில் அக்கறையோடு செயற்பட்டார். இவரது காலத்தில் 1999.01.25 முதல் தரம் 6 கற்பதற்கான வாய்ப்பு இப்பாடசாலையில் ஏற்படுத்தப்பட்டதுடன், நீண்ட காலமாக இருந்துவந்த ஆசிரியர் பற்றாக்குறையும் ஓரளவு நிவர்த்திக்கப்பட்டது. மேலும் 80’*20’ அளவுடைய நிரந்தரக் கட்டடமும் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் அவரது காலத்தில் முதன் முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தடந்தனர். மேலும், 2001.01.02 இல் தரம் 8, தரம் 9 வரை கற்பதற்கான அரிய வாய்ப்பும் இக்கிராம மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. அவரது பணிகள் காலத்தால் அழியாதவை.
அதனைத் தொடர்ந்து இப்பாடசாலையில் மர்ஹ_ம் எம்.எம். முஸ்தபா, மர்ஹ_ம் என்.கே.எம். இப்றாஹீம், மர்ஹ_ம் ஏ.எம். அப்துல் கபூர், ஆகியோரும் இப்பாடசாலையில் அதிபர்களாகக் கடமையாற்றினர். இவர்களது காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையும், பௌதீக வளத் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வாய்ப்புக்கள் அரிதாகக் காணப்பட்டமையினாலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு தம்மால் முடிந்தளவு பணியாற்றினார்கள். பின்னர் 2006.04.05 இல் யூ.எல்.எம். இப்றாஹீம் அவர்கள் அதிபராகக் கடமையேற்று பல்வேறு பௌதீக வள விருத்தியில் முனைப்புடன் செயலாற்றியதுடன் 2008.10.06 வரை கல்வி முன்னேற்றத்திற்கும் பங்காற்றினார்;. தொடர்ந்து 2008.10.06 இல் எம்.ஐ.எம். றவூப்; அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பாடசாலையில் இல்ல விளையாட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றதுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் வளர்ச்சியடைந்தன.
அதன் பின்னர், 2010.02.15 ம் திகதி முதல் ஐ.எம். பாஹிம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றது முதல் இரவு பகலாக இப்பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்தியிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் பெரும் அர்ப்பணிப்புடன் 2013.11.01ம் திகதி வரை சுமார் 4 வருடங்கள் அரும் பணியாற்றினார். இவரது காலத்தில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன. இதுவரை காலமும் அரசினர் முஸ்லிம் கலவன் (அ.மு.க) பாடசாலை என்றிருந்த பாடசாலையின் பெயரை ‘அல் - ஹிக்மா வித்தியாலயம்’ என பெயர் மாற்றம் செய்வித்தார். இவை தவிர பாடசாலையில் கணினிக் கற்கைப் பிரிவை ஆரம்பித்து கணினிகள் பெற்றமை, பிள்ளைநேயப் பாடசாலை என்ற திட்டத்தைப் பெற்று பாடசாலையின் சூழலை அழகுபடுத்தியமை, தளபாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தமை, தனவந்தர்களின் உதவி மூலம் நிழற்பிரதி இயந்திரம் பெற்றுக் கொடுத்தமை, ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான விலையாட்டு முற்றம் அமைத்தமை, தனவந்தர்கள் மூலம் வறிய மாணவர்களுக்கு பாதணிகள், கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தமை, மாணவர்களின் கல்வி விருத்திக்காக இரவுப் பாடசாலை நடத்தியமை, இணைப்பாட விதான செயற்பாடுகளின் முன்னேற்றங்களுக்கு எடுத்துக் காட்டாக உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம். பாயிஸ் அவர்களின் பங்களிப்புடன் ரக்பி போட்டியில் தேசிய மட்டத்தில் கொழும்பு ஜனாதிபதிக் கல்லூரியுடன் வெற்றிபெற்று சாதனை படைத்தமை என்பன போன்ற இன்னோரன்ன பணிகளை தியாகத்துடன் முன்னின்று செய்தார். இக்கிராம மக்களுடனும் பாடசாலை சமூகத்துடனும் ஒன்றித்து அவர் ஆற்றிய பணிகள் இக்கிராம மக்களால் மறக்க முடியாதவை.
பின்னர், 2013.11.01 முதல் கடமையேற்று பணியாற்றிவரும் அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் அவர்கள் பாடசாலையின் பௌதீக வளத்தை மேம்படுத்துவதிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும் கரிசனையுடன் செயற்பட்டார். மேலும் 2014 ல்; மிகப் பிரமாண்டமான பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியை முழுமூச்சாக நின்று சிறப்பாக நடத்துவதற்கு வழிகோலினார். மேலும் இப்பாடசாலையில் தரம் 10 மற்றும் தரம் 11ஐ ஆரம்பிப்பதற்கு முனைப்புடன் செயலாற்றினார். முதலாவது தொகுதி மாணவர்கள் 2019 இல் க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றி, பெறுபேற்றில் வலயத்தில் முதலாவது பாடசாலையாக மிளிர்வதற்கும் தோற்றிய அனைத்து மாணவாக்ளும் சித்தி பெறுவதற்கும் வழிகோலினார். இவரது வழிகாட்டலிலும் சிறந்த முகாமைத்துவத்தினாலும் இப்பாடசாலை சகல துறைகளிலும் முன்னேற்றகரமான நிலைக்கு இட்டுச் சென்றதை மறக்க முடியாது.
பின்னர் அதிபராகக் கடமையாற்றிய அல்ஹாஜ் ஏ.எல்.முகம்மது பாயிஸ் அவர்கள் 2020 இல் பொறுப்பேற்று, பாடசாலையில் பல்வேறு துறைகள் சார்ந்தும் காத்திரமான பணிகளை முன்னெடுத்துள்ளார். இவர் முதன்முதலாக ஆசிரியர் நியமனம் பெற்று இங்கு வந்ததிலிருந்து இக்கிராம மக்களுடன் அந்நியோன்ய உறவைக் கொண்டவராக இருந்துள்ளார். அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து பாடசாலையின் முக்கிய தேவையாகிய பௌதீக வளத்தை அபிவிருத்தி செய்வதில் மிகுந்த கனம் செலுத்திருக்கிறார்.
வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலயக் கல்வி அலுவலகத்தினதும் தனவந்தர்களினதும் உதவியுடன் தற்காலிக கொட்டில்கள் அமைத்தமை, தொடர் கட்டடத்தின் ஒரு பகுதியை பூர்த்தி செய்தமை, மலசலகூடத் தொகுதி நிர்மாணித்தமை, இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்த திட்டங்களை வகுத்ததுடன், குறிப்பாக விளையாட்டுத் துறையில் மாணவர்கள் தேசிய மட்டம் வரை செல்வதற்கேற்ற வகையில் பங்களிப்புச் செய்தமை, அலுவலக அறையை புனரமைத்தமை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியிலிருந்து 200 இற்கு மேற்பட்ட பயிலுநர் ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பாடசாலைக்கு வருகை தந்து இரு நாள் வேலைத் திட்டமாக ‘பாடசாலையும் சமூகமும்’ எனும் செயற்றிட்டத்தை பாடசாலை சமூகத்தை ஒன்று திரட்டி முற்றிலும் சமூகத்தின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் மூலம் பாடசாலையின் முகாமைத்தவம் மற்றும் பௌதீக வளத்தில் மாற்றம் ஏற்படுத்தியமை, மூன்று மாடிக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியை நாடி அதற்கான சாதகமான சந்தப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை, பாடசாலை வரலாற்றில் குறுகிய காலத்திற்குள் க.பொ.த. சா/த பரீட்சையில் ‘9ஏ’ சித்தி பெற்று சாதனை படைப்பதற்கேற்ற வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை நெறிப்படுத்தியமை என பல்வேறு செயற்பாடுகள் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் அவர்களது அர்ப்பணிப்புள்ள சேவைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
தற்பொழுது இப்பாடசாலையில் சுமார் 450 மாணவர்களும் 35 நிரந்தர ஆசிரியர்களும் இரு கல்விசாரா ஊழியர்களும் கடமையாற்றுகின்றனர். இங்கு சாரணர் பிரிவு, சுகாதார கழகம், ரக்பி கழகம், சிறுவர் கழகம் போன்ற இணைப்படவிதானக் குழுக்கள் சிறப்பாக இயங்குவதுடன் மாணவர்கள் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி வலய, மாகாண மட்டங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வருடாந்தம் கணிசமானளவு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு அக்கரைப்பற்று கல்வி வலயத்திலேயே ஒரு முன்னணிப் பாடசாலையாக இது திகழ்கின்றது.
இப்பாடசாலையில் தற்போது தரம் 11 வரை இருப்பதனால் இன்றும் கூட வருடாந்தம் அதிகளவான பெண் மாணவர்கள் தரம் 11 உடன் கல்வியை இடை நிறுத்திக் கொள்கின்றனர். தூர இடங்களுக்குச் சென்று கற்பதற்கு வசதியின்மை, போக்குவரத்துப் பிரச்சினை போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக படிப்பை அநேகர் இடைநிறுத்தி விடுகின்ற நிலைமை இன்னும் காணப்படுவது வேதனைக்குரியது.
இன்று இப்பாடசாலையின் உடனடித்தேவை மூன்று மாடிகள் கொண்ட ஒரு நிரந்தரக் கட்டடமாகும். வகுப்பறைகள் பற்றாக் குறைவாகக் காணப்படுவதால் மாணவர்கள் சிறந்த கல்வியைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மேலும் மாணவர்கள் கல்வியை இடையில் விட்டுவிடுவதைத் தவிர்ப்பதற்காக இங்கு உயர் தரம் ஆரம்பிக்கப்படுவதுடன், இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட வேண்டும்.
ஆரம்பம் முதல் இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்று ஏனைய பாடசாலைகளுக்குச் செல்கின்ற மாணவர்கள் பல துறைகளிலும் திறமையுள்ளவர்களாக திகழ்கின்றனர். இங்கு கல்வி கற்ற மாணவர்கள் இன்று சிறந்த நிலையில் முன்னேறியிருக்கிறார்கள், அதிகமான பட்டதாரிகள் உருவாகியுள்ளதுடன் பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் பலர் உயர் கல்வி கற்று வருகின்றனர். மேலும் கணிசமானோர் அரச தொழில் துறைகளிலும் உயர் பதவிகளிலும் உள்ளமை சிறப்பம்சமாகும்.
இப்பாடசாலையின் வளர்ச்சியே இந்தக் கிராமத்தின் எழுச்சியாகும். ஆகவே, இக்கிராமம் கல்வியிலே முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் 64 வருடங்களைக் கடந்து நிற்கும் இப்பாடசாலையின் உடனடித் தேவைகள் நிறைவு செய்யப்படுவதற்கும் இப்படசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கும் கல்வியதிகாரிகளினதும் பிரதேச அரசியல் பிரமுகர்களினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.







